Saturday, March 27, 2021

முதியோர் இல்லத்தின்' முகவரி

 நாமெல்லாம் எங்கேயோ

தோத்துட்டோம்,.  


மனித நேயம் பயிலாத

கல்வி என்ன கல்வியோ?


அம்மா..வயசானவங்களை 

பாத்துக்கிற இடம் இங்க இருக்குன்னு சொன்னாங்க அது எங்கன்னு..."


75 வயதை தாண்டிய பெரியவர் எங்கள் வீட்டின் முன் நின்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.


அவர் கேட்பது 'முதியோர் இல்லத்தின்' முகவரி! அது எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் ன் உள்ளது.


பாவம் வழி மாறி வந்திருக்க கூடும்.

நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பார் 

போல! களைத்திருந்தார்! .


ஐயா நீங்க யாரு? யாராவது அங்கிட்டு இருக்காங்களா? அவங்களை பாக்க வந்திங்களா? இந்த வயசுல இப்படி தனியா வந்திருக்கிங்க" அம்மா கேட்டார்.


எந்த கேள்விக்கும் பதிலில்லை.


மௌனமாக நின்று இருந்தார்.

அம்மா ஏதோ புரிந்துகொண்டார்.


ஐயாவுக்கு எத்தனை புள்ளைங்க?"


மூணு ஆம்புள புள்ளைங்க, ரெண்டு பொம்பள புள்ளை! கைவிரல்களை காட்டினார்.


அவங்க யாரும் உங்களை பாத்துக்கில்லையா?"


மீண்டும் அதே கனத்த மௌனம்.


ஐயா தப்பா நினைக்காதீங்க, இப்படி 

தனியா போனா அங்க சேத்துப்பாங்களான்னு தெரியல! உங்க புள்ளைங்க இல்லனா சொந்தகாரவுங்க யாராச்சும் வரணும்னு சொல்வாங்க"என்றார் அம்மா.


அம்மா நீங்க அந்த இடத்தை மட்டும் காட்டுங்க, நான் அவங்க கால்ல விழுந்தாவது...." 


வார்த்தை வாயில் இருக்கும் போதே அவருக்கு கட கட கண்ணில் நீர் முட்டியது.அவரது தோளில் 

கிடந்த  துண்டை கண்ணில் 

ஒற்றிக்கொண்டு சிறிது நேரம் விசும்பினார்.


அம்மாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.


ஐயா..கலங்காதிங்க..கலங்காதிங்க!" பதறியடித்து தேற்றினார்.


எத்தனை தேற்றினாலும் விசும்பல் அடங்கவில்லை! பல வருட அழுகை போல!! 


கொஞ்ச நேரத்தில் அவரே 

தேற்றிக்கொண்டு ஆசுவாசமானார்.


ஐயா கலைச்சு இருக்கிங்க டீ , காபி ஏதாது சாப்பிடறீங்களா?" கரிசனுத்துடன் அம்மா கேட்டார்.


வேண்டாம்' என்று தலையசைத்தார்.

ஒரு கனத்த மௌனத்திற்கு பிறகு,


கொஞ்சம் தண்ணி..." என்றார்.


தண்ணீர் குடித்த உடன் அம்மாவை 

இரு கரம் கூப்பி வணங்கினார்.


ஐயா ரொம்ப தளர்ந்து இருக்கிங்க.அவ்ளோ தூரம் நடக்க வேணாம்.இருங்க பையன உங்களை பைக்கல கொண்டு விட சொல்றேன்." 


அண்ணனை அழைத்து, " கண்ணு, ஐயாவை முதியோர் இல்லத்துல கொண்டு விட்டுரு! பைக்க மெதுவா ஓட்டிட்டு போ" என்றார்.


என் கை பிடித்து பெரியவர் 

அண்ணனின் பின் அமர்ந்தார்.


தக்கையான வலுவிழந்த உடல், 

சக்கையாய் காய்ந்த விரல்கள், அவரின் உள்ளங்கை சில்லென்று இருந்தது.


ஐயா கவலை படாதிங்க! வீட்ல 

பாத்துக்கிற மாதிரியே உங்கள 

அங்க நல்லா கவனிச்சுபாங்க" 

ஆறுதலுக்கு கூறினார் அம்மா. 


பெரியவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.துண்டில் ஒற்றாமல் விட்டுவிட்ட ஒரு துளி கண்ணீர் அவர் கண்களிலேயே தேங்கி நின்றது. 


வண்டி மெதுவாக நகர்ந்து சென்றது.

அம்மாவும் நானும் வண்டி சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்து 

கொண்டு நின்றிருந்தோம்.


இனிமேல் அந்த பெரியவரின் எதிர்காலம் என்னவென்று எனக்கு தெரியவில்லை! 


இந்த சமூகத்திற்கு சொல்லிவிட 

என்னிடம் பெரிதாக ஒன்றுமில்லை.

 

இருந்தாலும், 


சார், நாமெல்லாம் எங்கேயோ 

தோத்துட்டோம் சார்!".


மனதை கலங்கடித்த பதிவு.

No comments:

Post a Comment